Search This Blog

01 July 2016

சினம் ஒரு சங்கிலி


ஒரு குடும்பத்தலைவனுக்கு அடிக்கடி சினம் வருகிறதென்று வைத்துக் கொள்வோம். அவனது மனைவி, மக்கள், மனநிலைகள் அதனால் பாதிக்கப்படும். அவர்கள் சோகம் கப்பிய முகத்தினராவார்கள். அவர்களது மனவலிமை குன்றிப் போகும். தோல்வி – மனப்பன்மை அவர்களிடத்தில் தோன்றும். மறைவாகத் தீங்கும் செய்யும் குணமுடையவர் ஆவார்கள். அவர்களும் சிடுமூஞ்சிகளானாலும் ஆவார்கள். எளிதில் சினம் வயப்படும் பலவீனத்தையும் அவர்கள் பெற்று விடுவார்கள். அம்மட்டோடு போகுமா, போகாது; சினம் ஒரு சங்கிலி போன்றது. தொற்று நோய் போன்றதென்றும் சொல்லலாம்.

ஒரு அதிகாரியின் வீட்டுக் குழந்தை அதன் தாயாருக்குத் தன் பிடிவாதப் போக்கினால் கோபமூட்டுகிறது. அதன் விளைவினால் அந்த அம்மாள் தன் கணவனிடம் எரிந்து விழுகிறாள். அந்த அதிகாரி இந்தக் கோபத்துடன் தன் அலுவலகத்திற்குச் சென்று தன் பணியாளரிடம் சிடுசிடுவெனப் பேசுகிறார். மனம் புண்பட்ட பணியாளர் வீட்டுக்குப் போய்த் தன் மனைவியிடம் காரணமில்லாமல் கோபித்துக் கொள்கிறார். அந்த அம்மாள் உள்ளக் குமுறலுடன் இருக்கும் சமயம் அவள் குழந்தை வந்து ஏதோ கொடுக்கும்படி அவளை நச்சரிக்கிறது. அவள் ஆத்திரம் தீர அந்தக் குழந்தையை அடித்து விடுகிறாள். இப்படிச் சினமானது சங்கிலித் தொடர் போலச் சென்று பலருக்கும் துன்பத்தை விளைவிக்கும்.

சினமானது பிறரை எவ்வாறு துன்புறுத்துகின்றதெனப் பார்ப்போம். சொந்த மகன், மகள், வாழ்க்கைத் துணை என்று வைத்துக் கொள்வோம். சினம் எழும் போது அவர்கள் மனம் என்ன பாடுபடுகின்றது என்பதை நாம் உணர வேண்டும். பிறர் நம் மீது சினம் கொள்ளும்போது நம் மனம் எவ்வாறு நோகின்றது, வருந்துகிறது. என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதுபோன்று தானே பிறர்மேல் நாம் கொள்ளும் சினம் அவர்களுக்கு வருத்தத்தை அளிக்கும் என்று கண்டுகொண்டால், நம்மோடு ஒத்த உறவினர், நமக்கு நலம் செய்பவர்களை இப்படி வருந்தவிடுவது நல்ல தன்று என்று தெளிவாகும். எனவே அதைத் தவிர்க்கத் தான் வேண்டும்.
அது மாத்திரமன்று, ஒருவர் மீது சினம் கொண்டால் அது ஒரு அவமதிப்பும் கூட. ஒருவர் மீது சினம் கொள்ளும்போது அவர்கள்படும் வருத்தம் ஒரு சாபமாகவே மாறுகிறது. இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது பிறரை எவ்வாறு சினம் பாதிக்கிறது என்பது நன்றாக உங்களுக்குத் தெரியவரும்.

No comments:

Post a Comment