Search This Blog

29 March 2020

கற்பனை உலகம்

அடங்கிக் கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள்

சூரியன் அதன் போக்கில் உதிக்கின்றது, 
மழை அதன் போக்கில் பெய்கின்றது, 
வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை!!

மான்கள் துள்ளுகின்றன, அருவிகள் வீழ்கின்றன, யானைகள் உலாவுகின்றன, முயல்கள் விளையாடுகின்றன,
மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன‌!!!

தவளை கூடத் துள்ளி ஆடுகின்றது, 
பல்லிக்கும் பயமில்லை, எலிகளும், அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன, 

காக்கைகளும், புறாக்களும், மைனாக்களும், சிட்டுக் குருவிகளும்...............
ஏன், குளவிகளும் கூட அஞ்சவில்லை!!!

மானிட இனம் அஞ்சிக் கிடக்கின்றது , 
சக மனிதனையும் அதனால் நேசிக்கத் தயங்குகின்றது, கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கிக் கிடக்கின்றது

முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். அதில் அவன் மட்டும் வாழ்ந்தான் அவன் மட்டும் ஆடினான், அவனுக்கொரு உலகம் சமைத்து, அதுதான் உலகமென்றான்

மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்குத் தெரியவில்லை!!!

உழைப்பென்றான் சம்பாத்தியமென்றான் விஞ்ஞானமென்றான் 

என்னன்னெவோ, உலக நியதி என்றான்

உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக , நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான்

ஆடினான், ஆடினான் அவனால் முடிந்தமட்டும் ஆடினான்

ஓடினான், பறந்தான், உயர்ந்தான் முடிந்த மட்டும் சுற்றினான், 

கடவுளுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம் அவனால் உயிரை படைக்க முடியும் என்னால் முடியாது அதனால் என்ன விரைவில் கடவுளையே வெல்வேன் என மார்தட்டினான்

ஒரு கிருமி, கண்ணுக்குத் தெரியா ஒரே ஒரு கிருமி, சொல்லிக் கொடுத்தது, பாடம்

முடங்கிக் கிடக்கின்றான் மனிதன் , 
கண்ணில் தெரிகின்றது பயம், 
நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்

பல்லிக்கும், பாம்புக்கும், நத்தைக்கும், ஆந்தைக்கும் கூட உள்ள பாதுகாப்பு தனக்கில்லை, இவ்வளவுதான் நான் என விம்முகின்றான்

மண்புழுவுக்கும் கூட நான் சமமானவன், பலமானவன் இல்லையா என்பதில் அழுகின்றான்

முளைத்து வரும் விதை கூட அஞ்சவில்லை, நிலைத்து விட்ட மரமும் அஞ்சவில்லை எனில், மரத்தை விடக் கீழானவானா நான் என அவனின் கண்ணீர் கூடுகின்றது

மாமரத்துக் கிளி அவனை கேலி பேசுகின்றது, கண்ணீரைத் துடைக்கின்றான்

காட்டுக்குள் விலங்குகளும், பறவைகளும், மரங்களும், நீர் வீழ்ச்சிகள் கூட, அவர்கள் பாஷையில் பேசுகின்றன‌

ஆட்டுமந்தைக் கூட்டங்களும் , கோழிகளும் கூடப் பரிகாசம் செய்வதாகவே அவனுக்குத் தோன்றுகின்றது

கொரோனாவுக்காக, மனிதன் கைகழுவிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு இடுப்பினை சொறிகின்றது குரங்கு, மருத்துவமனையில் அவன் அடைபட்டு கிடப்பதை பார்த்துக் கொண்டே இருக்கின்றது, பண்ணையின் கோழி

நிறுத்தி வைக்கபட்ட விமானங்களைப் பார்த்தபடி, எக்காளச் சிரிப்பு சிரித்துப் பறக்கின்றது, பருந்து!!

நிறுத்தி வைக்கபட்ட கப்பலை கண்டு சிரிக்கின்றது, மீன் இனம்

அவன் வீட்டில் முடங்கி கிடக்க, வாசலில் வந்து நலம் விசாரிக்கின்றது காகம்., 

கொஞ்சிக் கேட்கின்றது சிட்டு, 

கடல் கரை வந்து சிரிக்கின்றது மீன்

மரத்தில் கனியினை கடித்தபடி, இதைப் பார்த்து சிரிக்கின்றது, அணில், 

வானில் உயரப் பறந்து கொரோனா நோயாளியினை உண்டாலும் எனக்கும் பயமில்லை என்கின்றது, கழுகு

தெருவோர நாய் பயமின்றி நடக்க, வீட்டில் ஏழு பூட்டொடு முடங்கி கிடக்கின்றான், மனிதன். தெரு நாயினை விட அவன் ஒன்றும் இப்பொழுது உயர்ந்தவன் அல்ல..

அவமானத்திலும், வேதனையிலும், கர்வம் உடைந்து, கவிழ்ந்து கிடந்து கண்ணீர் விட்டு ஞானம் பெறுகின்றது, மானிட இனம்..

No comments:

Post a Comment