Search This Blog

29 March 2020

R-Naught

~அலுவலகங்கள், வங்கிகள், ஐ.டி துறைகள், கல்லூரிகள் ஆகிய அனைத்து மக்கள் கூடும் இடத்திற்கும் ஏன் விடுமுறை அளிக்க வேண்டும் ???

டாக்டர்.... இந்தியால கொரோனா பாதிப்பு இப்போ தான வந்திருக்கு. ஆபீஸ் வர்றவங்களுக்கு உடம்பு சரி இல்லன்னா லீவ் எடுத்துக்க சொல்றோம் !! மத்தபடி நல்லா இருக்கவங்க ஆபீஸ் வந்தா என்ன தப்பு ??

சார்... 'Incubation Period' என்ற வார்த்தை உண்டு. அதாவது, கிருமி உடலில் ஊடுருவிய காலத்திற்கும் அந்த நபர் நோய்த்தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்தும் காலத்திற்குமான இடைப்பட்ட பகுதி தான் 'Incubation Period'. இந்த Incubation period-ல் ஒருவர் தனது உடலில் கிருமித்தொற்றை கொண்டிருப்பார். ஆனால், நோய்க்கான எந்த அறிகுறியும் இருக்காது.

கொரோனா வைரஸின் Incubation Period 
2 முதல் 14 நாட்கள். அதாவது கொரோனா தாக்கிய நபர் எந்த ஒரு அறிகுறிகளும் இல்லாமல் 2 முதல் 14 நாட்களுக்கு இருக்கலாம். உதாரணமாக ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு வைரஸ் தாக்கிய 5-ம் நாள் காய்ச்சல் வருகிறது. உடனே விடுப்பு கொடுத்து நீங்கள் அனுப்பி விடுகிறீர்கள். ஆனால், அந்த 5 நாட்கள் இடைவெளியான Incubation Period-ல் அவர் எத்தனை பேருக்கு கிருமியை பரப்பியிருப்பார் ??? அலுவலகத்தில் அவருடன் புழங்கும் எத்தனையோ மக்களுக்கு கிருமித்தொற்று சென்றிருக்கும் !!

ஆகவே தான் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டுகிறோம்.

Incubation Period- ஐ விட முக்கியமாக கவனிக்க வேண்டியது "R-NAUGHT"

அதென்ன டாக்டர் R-Naught ??

கிருமித்தொற்று பாதித்த ஒருவர் எத்தனை நபருக்கு தனது கிருமித்தொற்றை பரப்புகிறார் என்பதன் அளவீடே 'R-Naught'. இதனை "BASIC REPRODUCTION RATE" என்றும் கூறுவர்.

இந்த R Naught மதிப்பு 1-க்கு கீழே இருந்தால் பிரச்சனை இல்லை. கிருமி பரவுவது தானாக அழிந்து விடும். (R-Naught < 1)

R-Naught மதிப்பு 1-க்கு மேல் இருந்தால் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்க்கொள்வது அவசியம்.(R-Naught > 1)

2002-2003 இல் உலகை உலுக்கிய சார்ஸ் (SARS) வைரசின் R Naught 3 முதல் 4.
சார்ஸ் பாதித்த ஒருவர் அதிகபட்சமாக 4 பேருக்கு தனது கிருமித்தொற்றை பரப்பினார்.

அப்போ, கொரோனாவுக்கு டாக்டர் ??

தற்போதைய நிலவரப்படி கொரோனாவின் R-Naught 3.8 !!!!!

ஆமாம். கொரோனா பாதித்த ஒருவர் தனது கிருமித்தொற்றை அதிகபட்சமாக சுமார் 4 பேருக்கு பரப்புவார்.

அதனால் தான் மக்கள் கூட்டம் கூட வேண்டாம் என்றும் பொது இடங்களில் செல்வதை தவிர்க்கவும் என்றும் அறிவுரை செய்யப்படுகிறது.

கொரோனாவின் R-Naught தற்போதைய 3.8-இல் இருந்து 1- க்கு கீழே செல்ல வேண்டும். அப்போது தான் நிலமை கட்டுக்குள் வரும். 

அது வரை அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள் போன்றவற்றில் மக்கள் கூடுவது சிறந்தது அல்ல. 

மக்கள் மிக அதிகமாக புழங்கிடும் இடமான அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், சுற்றுலா தலங்கள் ஆகிய அனைத்தும் 
R-Naught மதிப்பு 1-க்கு கீழ் செல்லும் வரை காலவரையின்றி மூடப்பட வேண்டும்.

பணி புரியும் நபர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளித்து அவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டியது முதலாளிகளின் தலையாய கடமை.

உலகையே ஆட்டிக்கொண்டிருக்கும் கொள்ளைநோயை சாதாரணமாக எண்ண வேண்டாம். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றவை.

நோய்வாய்ப்பட்டவரை கண்டறிவது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் மற்றவருக்கு நோய் பரவாமல் இருப்பதிலும் தேவை.

முதலாளிகளே, சற்று சிந்தியுங்கள்.உங்கள் தொழிலாளின் வீட்டில் அடுப்பெரிய நீங்கள் கூறுவதை அவன் கேட்டுத்தான் ஆக வேண்டுமென்ற அவனது இயலாமையை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டாம். 

ஏனென்றால், இது கம்ப்யூட்டரில் ஏறிக்கொள்ளும் சாதாரண வைரஸ் அல்ல; கொரோனா வைரஸ் !!
முடிவு உங்கள் கையில் !!! நியாயம் என்னும் தராசு கொண்டு சிந்தியுங்கள். 

மக்கள் நலம் பேண வழக்கம் போல மருத்துவமனைகள் மட்டும் எந்நேரமும் இயங்கட்டும்.

நன்றி ❣️

No comments:

Post a Comment